headlines

img

புத்தக மேசை : மகிழ்வான ஒரு தளர்வு... ச.லெனின்

ஜெர்மன் எழுத்தாளர் கதே “இளம் வெர்தரின் துயரம்“ The Sorrows of Young Werther  என்ற குறுநாவலை 1774 -ல் எழுதினார். இது தமிழில் “காதலின் துயரம்“ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. அக்கதையின் உள்ளடக்கம் நம் தமிழகத்தின் தேவதாஸ் பாத்திரம்தான். காதல் தோல்வி எனில் தாடியும், மது குப்பியும் என்று எப்படி “தேவதாஸ்” இங்கு அடையாளப்படுகிற அதைப்போலவே கதேவின் “காதலின் துயரம்“ தற்கொலைக்கே வழிகோலி விட்டது. இக்கதைக்காக எவ்வளவுக்கு எவ்வளவு கதே கொண்டா-டப்பட்டரோ அதே அளவிற்கு தற்கொலையைத் தீர்வாக எழுதியதற்காக கடுமையாக விமர்சிக்கவும்பட்டார். 

காதல் என்பது அதீதமான கொண்டாட்டமாகவோ அல்லது கொடும் துயரமாகவோ மட்டுமே நமக்கு சொல்லப்படுகிறது. காதல் குறித்த இந்த மேம்போக்கான பழமையான கட்டுக்கதைகளை எல்லாம் அலெக்சாண்டிரா கொலண்டையின் “காதல்” என்கிற இந்நாவல் உடைத்து நொறுக்குகிறது. ஒருவர் தன்னுடைய சுயத்தையே இழந்து நிற்பது எப்படி காதலாகும் என்ற கேள்வியையும் உள்ளடக்கி, காதல் என்பதன் ஆழமான பொருள் குறித்த நீண்ட விவாதமாகவே இது அமைந்துள்ளது. இப்புத்தகத்தில் சிகப்புக் காதல் என்கிற நாவலும், மகத்தான காதல், சகோதரிகள், மூன்று தலைமுறையின் காதல் உள்ளிட்ட குறுநாவல்களும், சிறுகதையும் ஒருங்கே கொண்டு வரப்பட்டுள்ளது.கொலண்டை  ரஷ்யப்  புரட்சிக்கு பிந்தைய அரசியல், சமூக நலத்துறை அமைச்சராக செயல்பட்டவர். மிகப்பெரிய ஒரு நாட்டின் முதல் பெண் அமைச்சர் இவரே. ரஷ்யாவின் மிக முக்கியமான கருத்தாற்றல்மிக்க ஆளுமை. பெண்ணியம் குறித்த தனது கருத்தாற்றலை தத்துவ குறிப்புகளாக மட்டும் பதிவிடாமல் பொதுதளத்தில் இருப்பவர்களும் படித்து விவாதிக்கும் நோக்கில் இந்நூலை கதை வடிவமாக கொடுத்துள்ளார்.

இழப்புகளும் மீட்டெடுப்பும்
ரஷ்யப் புரட்சிக்கு முன்பும், பின்புமான சிறு காலப் பகுதியே இங்கு கதைகள் நிகழும் காலமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய காலப் பகுதியின் நிகழ்வுகளை மையப்படுத்தி  இது எழுதப்பட்டிருந்தாலும், அதை விவாதிக்கும் அளவிலான சமூக வளர்ச்சியைக் கூட நம் இந்திய சமூகம் இன்றும் அடையவில்லை என்றே சொல்ல வேண்டும். புரட்சிக்குப் பிறகான காலத்தில், எல்லாம் மாயாஜாலத்தால் தலைகீழாக மாறிவிடவில்லை. சுற்றிலும் நிகழ்ந்த எல்லா தாக்குதல்களையும் கடந்து ரஷ்யாவை மீட்டெடுக்க அவர்கள் எவ்வளவு இழந்தார்கள் என்பதையும் இந்நூல் கோடிட்டு காட்டுகிறது. இங்கு இழப்பென்று கூறுவது வெறும் பொருளாதாரம் சார்ந்த இழப்பு மட்டுமல்ல. ஒட்டுமொத்த ரஷ்ய மேம்பாட்டிற்காய் நெருக்கடியான பொருளாதார நிலைமைகளில் சிக்கித்தவித்த தொழிலாளர்கள், அதில் தேங்கிப்போன தோழர்கள், பாதிக்கப்பட்ட மனித உறவுகள் உள்ளிட்டவையுமே இதில் பேசப்பட்டுள்ளது. கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் மனித உறவுகள் சார்ந்தும், மோசமான முதலாளித்துவ காலாச்சாரங்களில் இருந்தும் ரஷ்யாவை மீட்டுருவாக்கம் செய்யும் அம்சத்தையும் நாவல் அழகாக எடுத்தியம்புகிறது.

“முக்கியமான வேலை, அவசரமான வேலை, அற்புதமான வேலை என எப்போதும் வேலைக்கு மேல் வேலை இருக்கும்“...... “சோர்வென்றால் என்னவென்றே தெரியாத எனதருமை சாகசப் பெண்ணே..”  “எல்லாம் பொது நலனிற்காகத்தான், எல்லாமே புரட்சியின் வெற்றிக்குத்தான்“ என்கிற நாவலில் வரும் இதுபோன்ற வரிகள் புரட்சிக்கு பிறகு ரஷ்யாவில் பெண்கள் எவ்வாறு சலிப்பூட்டும் வீட்டு வேலைகளில் இருந்து சமூக உழைப்பில், குறிப்பாக சமூக மேம்பாட்டிற்கான பணியில் ஈடுபட்டார்கள் என்பதை விளக்கும். குடும்ப உழைப்பிலி-ருந்து சமூக உழைப்பிற்கு பெண்கள் முன்னிறுத்தப்படா-தவரை பெண்களின் முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை என்று ஏங்கெல்ஸ் குறிப்பிட்டதை புரட்சிகர ரஷ்ய எவ்வளவு போரட்டங்களோடு எதிர்கொண்டு அமலாக்க பணியாற்றியது என்பதையும் கதையின் போக்கு விளக்குகிறது. 

இந்திய சமூகம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வழியில் மணவிலக்கு உரிமையை தந்துள்ளது. ஆனால் பொருளாதார ரீதியாக தனது சொந்த தேவை முதல் குழந்தைகளின் வளர்ப்பு வரை அவள் ஆணை சார்ந்தே நிற்கும் சூழல் இங்கு உள்ளது. பிறகு எவ்வாறு விவாகரத்து பெரும் வரையிலும், பெற்ற பிறகும் பெண் தனித்து நிற்க முடியும். போதாகுறைக்கு பெண்கள் தனித்து நிற்பதையே முறைத்து முறைத்து பார்த்து புறக்கணிக்கும் நம் சமூக கட்டமைப்பு வேறு. 

மார்க்சிய பெண்ணியம்
ஆண், பெண் உறவுமுறை, பாலுறவு உள்ளிட்டவைகள் குறித்த ஒரு பெரும் விவாதத்தை நூறாண்டுகளுக்கு முந்தய காலப்பகுதியை கொண்ட இந்நாவல் முன்வைக்கிறது. கெட்டிதட்டிப்போன நமது இந்திய சமூகம் இன்றும் அந்த விவாதங்களுக்கு வெளியே வெகுதொலைவில் உள்ளது என்பதுதான் நிதர்சனம். நாவல் பல கதை மாந்தர்களின் உளக்கிடையை வெளிப்படுத்தி விவாதிக்கிறது. அவை அனைத்தும் கொலண்டையின் கருத்தல்ல. அதில் யார் முன்வைக்கும் கருத்து காத்திரமானது என்பதை மிகுந்த கவனத்தோடு வாசிப்பது அவசியம். 

லெனினுக்கும், கிளாரா ஜெட்கினுக்கும் இடையே நடந்த விவாதங்கள் “ஒரு கோப்பை தண்ணீர் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்“ என்கிற தலைப்பில் “தோழமை” வெளியீடாக வந்துள்ளது. ஏங்கல்சின் “குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்“ ஆகிய நூல்களை வாசிப்பது கொலெண்டை எழுப்பும் கேள்விகளை மேலும் விளங்கிக் கொள்ள உதவும். முதலாளித்துவத்தின் தாராளவாத பெண்ணியத்திற்கும் மார்க்சிய பெண்ணியத்-திற்குமான வித்தியாசத்தையும் அவை விளக்கும்.
பாட்டாளி வர்க்க புரட்சியின் வழியே பூத்த புதிய சமூக அமைப்பின் சமூக நலத்துறையில் பணியாற்றிய அனுபவத்துடன், ஆண் பெண் உறவு நிலை குறித்த முற்போக்கு வாழ்நிலையை எட்டிப் பிடிக்கும் பயணத்தின் ஒரு பகுதியாகவே கொலண்டை இந்த நாவலை எழுதி இருக்க வேண்டும். இது விவாதம்தானே அன்றி தீர்வாகப் பார்க்க வேண்டுமா என்பது கேள்வியே. எனவேதான் “மூன்று தலைமுறைகளின் காதல்” என்கிற கதையில் “இதில் யார் சரி? ஒரு புதிய வர்க்கம், புதிய இளமை, தனது புதிய அனுபவத்துடன், தனது புதிய கொள்கைகள், தனது புதிய உணர்வுகளுடன் மகிழ்ச்சிக்கான பாதையில் போவதுதான் நமது புதிய எதிர்காலமா?” என்ற கேள்வியோடு விவாதத்தை கொலண்டை நிறைவு செய்கிறார்.

“பொறுக்க முடியாத இறுக்கத்திற்குப் பிறகு, எல்லாம் தளர்ந்து போகும். அப்போது ஒரு மகிழ்ச்சியான இறுக்கமற்ற” நிலையை உணர்வோம். காதலும், திருமண உறவும், ஆண் பெண் உறவும் இறுக்கமற்ற, நேசம் மிகுந்த, மனங்களின் கருத்தியலை உள்வாங்கும் ஒரு மேம்பட்ட வாழ்நிலையை நோக்கிய பயணத்திற்கான விவாதமே கொலொண்டாயின் இந்த நூல்.

காதல்
அலெக்சாண்டிரா கொலண்டை
தமிழில் சொ.பிரபாகரன்
சிந்தன் புக்ஸ் 
132/251, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 600086, தொடர்புக்கு  94451 23164
பக்கம்: 497 ரூபாய் 450/-

;